Tuesday, July 28, 2009
செம்புறாந்து
கார்லூசுக்க வீடப்பத்திதான் காலையிலே பேச்சா இருந்தது. அம்மையும் அக்காவும் வார்த்தவ எதுவும் கீழ உழாம பேசிண்டிருந்தாவு. பெரும்பாலும் கிட்ட வீடுவள்லேயும் இதுதான் பேச்சா இருந்தது. கொஞ்ச நேரம் கவனிச்ச பெறவுதான் என்ன விசயம் பேசுதாவணி சொல்லி எனக்கு மனசிலாச்சு. நேரம் வெளுத்த பெறவு ஒன்னிரண்டு சொந்தக்காரவுங்க வீட்டுக்கு வந்துண்டும் போயிண்டும் இருந்தாவு.
பனி மூட்டத்துல மேல எழும்புத பொகையப் போல விசயம் பரவுண்டிருந்தது. அவுங்க வீட்டத் தாண்டி போவும்ப கொஞ்சம்பேரு சோகமா இருந்ததப் பாத்தேன். வீட்டுக்கு முன்ன கருப்புக் கொடி இல்ல; வேலயெல்லாம் ஏகதேசம் அப்பிடியே நடந்துண்டிருந்தது.
கார்லூசுக்கு அஞ்சு மக்க. எளையது நாலும் பெண்ணு, மூத்தது பட்டம். எனக்குத் தெரிஞ்ச நாள்லேந்து பட்டம் அவுங்க அப்பாவுக்க கூட தொழிலுக்குப் போவுண்டிருந்தாரு, இப்பம் இருந்ததயெல்லாம் வித்து பெறக்கி வெளிநாட்டுக்கு போனதுதான் மிச்சம் பெரிய ரெச்ச ஒண்ணுமில்ல. கடைசியில உள்ளவளுக்க பேரு புனிதா.
புனிதாவுக்கு என்னவுட ரெண்டு வயசு கூட இருக்கும். கருப்புலயும் நல்ல குருந்து நெறம். “இவ பெறந்த நேரம் . ஒரு எலிக்குஞ்ச கிட்ட கொண்டு போட்டா, எது எலிக்குஞ்சு எது புள்ளையிண்ணு தெரியாது. அப்புடி இருந்தவ இப்பம் இருக்க லெச்சணத்த பாருண்ணு” லேனம்ம கெழவி சொல்லும்.
“போங்கே மனுசி நீங்க இப்பமும் பெருச்சாளி போலதான் இருக்கோம்” எண்ணு புனிதா சொல்லுவா. புனிதாவுக்கு லேனம்ம கெழவி ஒரு விதத்துல சொந்தம். புனிதா அம்மாவுக்க வயித்துல இருக்கும்ப வல்லேரியன் வைத்தியரு மனுசிக்க லெட்சணத்த பாத்திண்டி ஒனக்க கஷ்டத்த தீக்க ஒரு ஆம்புள புள்ள வந்து பெறக்குவானண்ணி சொல்லுவாரு. கடைசியா ஒரு ஆம்புள புள்ளய பிச்சயா போடுமுண்ணு அந்தோனியார் இருந்த இடமெல்லாம் ஏறி எறங்குனாங்க கடைசியில் அந்தோனியாரும் கைய மலத்திட்டாரு ..!
கார்லூசுக்கு நல்ல கஷ்டந்தான். மூத்த ரெண்டு பெம்பிள்ளையையும் ரெண்டு பேருக கையில பிடிச்சு குடுத்துட்டாரு, அந்தக் கடனும் இப்ப தலையில ஏறி இருக்கு. இன்னும் இருக்க ரெண்டுபேரயும் கரசேக்கணுமேயணி நெனச்சும்ப அவருக நெஞ்சு அடச்சும். வீட்டு செலவுங்களயெல்லாம் விசயங்கள் அவருக பெஞ்சாதி சூசம்ம பாக்க தொடங்குட்டது. புட்டு, இடியப்பம், கொழுகட்டையிணி ஒவ்வொண்ணும் தனி தனி அடுப்புல வேவும்.
பயிக்கயெல்லாம் நேரம் வெளுக்குததும் வெளுக்காததுமா அரவொறக்கத்துல பாத்திரங்களோட போய் நிக்கும். சின்ன சின்னதா சம்பாதிச்ச என்ன வேலையெல்லாஞ் செய்யணுமோ அதெல்லாம் மனுசி செஞ்சது. கருங்க சந்தையிலேந்தி வாங்கிவுட்ட கலர் கோழி குஞ்சுவ காம்பவுண்டுக்குள்ள வெளையாடுண்டு நிக்கும்ப, இனி எத்துன நாளுல இதுவ வளந்து நமக்கு ஒதவும்முண்ணு மனுசி கணக்கு போடும்.
எங்க வீட்டப் போல அவுங்க வீட்டுலேயும் பண்ணி வளத்துனாவு. நீண்ட மூஞ்சிய வச்சு வக்கு ஒடஞ்சு போன மண் சட்டியில ஊத்தி வச்சிருக்க கஞ்சுதண்ணிய உர்.. உர்ருண்ணு உறிஞ்சு குடுச்சும்ப நல்லா இருக்கும். கடைசியில ஒரு நாளு நாடாம்மாரு வந்தி இருநூறோ இருநூத்தம்பதோ குடுத்துண்டு, பச்ச ஓலையில மொடஞ்சு உறும உறும கதறலோட பண்ணிய தூக்குண்டு போவும்ப பாக்குததுக்கு மறுக்கமா இருக்கும்.
புனிதா நல்லா படுச்சுவா. வாத்தியாம்மாரு சொல்லுததெல்லாம் அவளுக்க மனசுல அச்சுட்டால பதியும். எனக்கு கணக்கு ஒண்ணும் மண்டையில ஏறாது. அது ஒரு கிருமி கடி போல.
எங்க போத்தியாரு எப்பமும் சொல்லுவாரு “ஒனக்க மண்டையில கொ†டில்பாட்டு ஆத்து தொளி இருக்குலே..” எனக்கு கணக்கெல்லாம் அவதான் சொல்லித்தருவா. வேற ஒரு குடும்பத்துல பெறக்க வேண்டியவ சூசம்மக்க வயித்துல வந்து பெறந்துட்டாணி லேனம்ம கெழவி எப்பமும் சொல்லும். சாமியாருமாருவள பிடுச்சு எதாவது ஒதவிவ கேட்டு இவள பெரிய படிப்பு படிச்ச வச்சாதான் உண்டு இல்லேணா செலவு செய்ய நம்ம பெட்டியில வச்சிண்டா இருக்கோம்?
“ரெண்டு கொமர எறக்குனதுக்கே மூச்சு முட்டு போச்சு, அந்தத் தண்ணிலேந்தி இனியும் கரயாறேலே. ஆணாப்பெறந்தவன் கொண்டு வாறது வட்டி கடத்துக்கும் வயித்து கடத்துகுமே தெவையில, மூத்த மொவன் வெளிநாட்டுல போய் கஷ்டப்பட்டியும் அஞ்சு ரூவாய கண்ணுல காணமுடியில. இந்த லெச்சணத்துல அடுத்த கொமருவளுக்கு எங்கேருந்து சேக்க? எளையவ படுச்சுதாணி சொல்லி இனியும் படுச்ச வச்சா, அஞ்சு லெச்சம் பத்து லெச்சமுண்ணி செலவு செஞ்சி, படுச்ச மாப்புளய புடுச்சுததுக்கு யாரால கழியும்?” சிநேகமா விசாருச்சுதவங்கண்ட சூசம்ம மனுசி இப்புடுதான் சொல்லும்.
இது மட்டுமில்லாம முப்பது முப்பத்துரண்டு வயசான மோனுக்கு கல்யாணங் கெட்டு குடுக்குததுக்கு முடியாம இருக்குதத நெனச்சு மனுசிக்கு நல்ல சங்கடம் உண்டு. எல்லாத்தயும் மாதாவண்ட ஒப்படச்சி உமிழ் நீர எறக்குண்டிருக்கும். வேற என்ன செய்ய?
பெரிய பரிச்ச முடுஞ்சிருந்த நேரம், புனிதா பத்தாங்கிளாசு பரிச்ச எழுதியிருந்தா, நான் எட்டாங்கிளாசு. உச்ச வெயிலு சுள்ளண்ணி அடுச்சுண்டிருந்ததது. நான், புனிதா, சாண்டி, கலா, பட்டம் எல்லாரும் புனிதாவுக்க திண்ணையில ஒடஞ்ச கலர் வளையல்வள வச்சு “டிப்பிட் டிப்பிட்டா வாட் கலர் இஸ்” வெளையாடுண்டிருந்தோம். காம்பவுண்டுக உள்ள அவுங்க வீட்டுல உள்ள கலர் கோழி குஞ்சுவ வெளையாடுண்டிருந்தது.
இப்பம் பட்டத்துக்க நேரம், ஒடுஞ்ச வளையல்வள கைக்குள்ள பொத்தி டிப்பிட் டிப்பிட்டா சொல்லும்ப.. ஒரு கோழி குஞ்சு படபடத்து வீட்டுக்குள்ள பறந்து வந்தது. ரெண்டு மூணு தூவலும் வடக்கும் தெக்குமா பறந்தது. எல்லாரும் படாரணி எழும்பி பாத்தா... அதுக்குள்ள கோழி குஞ்சுவ எங்க பறந்ததணு தெரியேல.
“லோய் செம்புறாந்து லோய்” பட்டம் ஆகாயத்துல பாத்து செத்தம் போட்டான். எல்லாருக்கும் படபடண்ணு இருந்தது, ஒரு செம்புறாந்து கீழேருந்து மேல பாத்து பறந்தது. புனிதாவுக்க அம்ம ஓடி வந்து “வெரட்டுங்க மக்களே வெரட்டுங்க” சொல்லுச்சு. பட்டம் வெளியல ஓடி வந்து முத்தத்தல கெடந்த ஓட்டுத்துண்ட எடுத்து ஸ்பீடா எறிஞ்சான். செம்புறாந்துக்க மேல பட்டிருந்தா அதுக்கு இப்பம் பூச நடத்துத நேரம், நல்ல காலம் தப்புட்டது.
அப்பிடியே நாங்க முத்தத்துல நிண்ணு வெளையாடத் தொடங்குனோம். சூரிய வெட்டம் கீழ எறங்குண்டிருந்தது. எல்லாருக்க விருப்பப்படி கிளிக்கிந்தி வெளையாட தொடங்குனோம். அப்பந்தான் பொடியன் ஓடுண்டு வந்தான். “புனிதா ஒங்க அம்ம ஒன்னய சொல்லுவுட்டது”. புனிதா என்னத்துகணி கேட்டுண்டி நிண்ணா.. பொடியன் விசயத்த சொன்னான். புனிதா வீட்டுக்குள்ள இருந்தா நாங்க அவுங்க வீட்டு கைவரிசையில நிண்ணு உள்ள எட்டு பாத்துண்டு நிண்ணோம். ரெண்டு கன்னியாஸ்திரிவ சேருல இருந்திண்டிருந்தாவு. அவுங்க அப்பா ஒரு கை ஒடுஞ்ச சேருல இருந்தாரு. அம்ம முறி நடையில நிண்ணு கன்னியாஸ்திரிவ பேசுதத கேட்டுண்டு இருந்தது. ரெண்டு கன்னியாஸ்திரிவளும் எளஞ்சாம்பல் நெறத்துல உடுப்பு உடுத்தியிருந்தாங்க, அவுங்கள பாக்கும்ப டிவியில பாக்குத பென்குயின் பறவக ஓர்மதான் வந்தது.
“டேய், புனிதாவ சிஸ்டர் ஆக்குததுக்கு வந்திருக்காவு அப்பிடித்தானா?” பட்டம் உள்ள பாத்துண்டே கேட்டான். “டேய், சிஸ்டர் ஆக்குததுக்கா.. கூட்டுண்டு போய் சிஸ்டரா படுச்ச வச்சுவாவு..” கலா சொன்னா. “டேய்.. சிஸ்டரா போறவங்கயெல்லாமே நல்ல அழகா இருக்குவாவு..” மூக்க வடிச்சிண்டே சாண்டி சொன்னான். அவஞ் சொன்னதப் போல அங்க வந்திருந்த சிஸ்டர்வ நல்ல அழகா இருந்தாவு. உடுப்பு நல்ல சூப்பரா இருந்தது. அந்த உடுப்பு எத்துனா ஒரு தடவையாவது நமக்கு போட்டு பாக்கணுமுண்ணு தோணும். அந்த சிஸ்டர்வள்டேந்து நல்ல மணம் வந்திண்டிருந்தது. சாண்டி பட்டத்தண்ட கேட்டான். “லே, ஒங்க அக்காளயும் சிஸ்டர் ஆக்குததுக்கு தேடு வருவாவே”
“என்னத்துக்கு தேடு வருவாவு, லேய் அவுங்க நெறைய பெம்புள்ள மக்க இருக்க வீட்டுவள்லதான் வருவாவு.” பட்டஞ் சொன்னான்.
“என்னத்துக்கு அப்படி?”
“மேலேந்தி அப்புடுபட்ட வீட்டுவளுக்குதான் அனுப்புவாவு...”
எங்க வீட்டுல, எனக்க அக்காமாரு ரெண்டுபேரும் காலேஜ் படுச்சுண்டிருந்தாவு. எங்க அப்பாவுக்க வருமானம் மட்டும் வீட்டுக்குத் தெவையேல, எட்டாங்கிளாசோட பள்ளிக்கூடத்துக்கு டாட்டா காட்டுண்டு நானும் கடலுக்கு போவத் தொடங்குனேன்.
அதுக்குப் பெறவு புனிதாவ அஞ்சு அஞ்சர வருசம் கழிஞ்சுதான் பாத்தேன். ஒரு நாள் ஞாயிற்றுக் கெழம பூச முடுஞ்ச பெறவு, கோயில்ல வச்சு புனிதா தெருஞ்ச ஆளுவளண்ட பேசிட்டு நின்னா. புனிதா சாம்பல் நெற உடுப்புல நல்ல அழகா இருந்தா. எனக்கு கிட்ட போய் பேசுததுக்கு நல்ல மடியா இருந்தது. இன்னும் அஞ்சு ஆறு மாசத்துல சிஸ்டர் பட்டம் கெடச்சுமுணி ஆளுவ சொல்லுச்சு.
சூசம்ம, முறி கட்டில்ல கெடந்து கரஞ்சுண்டிருந்தது. மூத்த மோவ தலையில கைவச்சு தடவி குடுத்துண்டிருந்தா. யாரோ அம்மிக்கல்ல தலையில தூக்கி வச்சதப் போல தல பயங்கரமா கனத்துச்சு. நாளக்கு எப்பிடி வெளியில தல நிமுந்து நடக்குததுண்ணு நெனச்சும்ப இனியும் தல நல்லா நொந்தது.
கார்லூசு, சீவனில்லாத பழஞ்சீலையபோல நடு வீட்டுச் செவுரோட சாஞ்சிருந்தாரு. உடிய காலம் தொளவயும் கச்சாலும் எடுத்துண்டி தொழிலுக்கு கௌம்புத நேரம் இப்பிடி இருந்தவருதான்... சாதாரணமா வீட்டுல இருக்குத புள்ளயே உடிய காலம் ஒரு ஆம்புள்ளயோட வந்த நின்னா எந்த அப்பன்தான் தாங்குவான்.
கார்லூசு எட்டிச் சவுட்டுத தூரத்துல புனிதா இருந்தா, அவளுக்க கிட்டயே டிப்டாப்பா பேண்டு சட்டையெல்லாம் போட்டு சேருல இருந்தாரு அவ கூட்டிட்டு வந்த ஆளு. தலய நிமுரத் தெரியாத ஆளப்போல, வந்த நேரத்துலேந்தே தலய குனிஞ்சு போட்டிருந்தாரு அவரு.
அமைதியா இருந்த வீட்டுல, படாரணி கதவத் தொறந்திண்டி லேனம்ம கெழவி உள்ள வந்தது. வந்த கெழவி புனிதாவுக்க முன்ன குனிஞ்சு நிண்ணு கேக்க தொடங்குச்சு.. “அம்ப, நீ சிட்டர் ஆவுததுக்கு போனயோ? இல்லேணா ஆம்புளவள மயக்குததுக்கு போனயோ? அங்க செல்லம்போல இருக்க முடியாம ஊந்துண்டியா வந்துச்சு? பாவப்பட்ட குடும்பத்துக்கு சாமத்த கொண்டு வந்து சேத்துட்டேம்மா” கெழவி போட்ட செத்தத்துல ஆளாளுக்கு கரச்சய திரும்பவும் தொடங்குனாங்க.
“கார்லூசு, இவளயெல்லாம் கழுத்துல கல்ல கெட்டி கொண்டு கடல்லுல தாத்துல, இப்பிடி உள்ள மக்கள் வச்சிண்டிருக்கக்கூடாது.” கெழவி சொல்லுண்டு விர்ருண்ணு எறங்கி போவுட்டது.
கார்லூசுக்கு என்ன செய்ததுணு ஒண்ணும் தெரியேல. அடிபட்ட அஞ்சாளையப் போல மனசு வேதனையில கெடந்து நெளிஞ்சது. “இந்தப் புள்ளய மட்டும் நான் எதுக்கு சிஸ்டரா அனுப்புனேன். இயேசுவே, இவள நான் என்னத்துக்கு ஒரு பாரச் சிலுவையா நெனச்சேன். ஒரு ஆத்துமமும் எனக்கு வந்து ஒதவேலயே... ஒறங்கும்போதும் ஒணரும்போதும் ஒம்மளதானே நெஞ்சுல நெனச்சேன். நீரும் எனக்கு இத ஒணர வெச்சேலயே.” கடல் தொடர்ந்து அடிச்சு கௌப்புத மண்ணப்போல கார்லூசுக மனசுல கேள்வியும் பதுலுமா வந்துண்டிருந்தது. கண்ணுலேந்து கண்ணீரு மாலமாலயா வடிஞ்சுண்டிருந்தது. மனியஞ் செத்தம் போட்டு கரயத் தொடங்குனாரு, கரச்ச தொண்டைய ஒடச்சுண்டு வெளிய வந்தது. இருந்தவங்களெல்லாம் பேடுச்சுபோய் எழும்புனாவு.
புனிதாவுக்கு இனியும் பொறுக்க முடியேல. அப்பாவுக்கத் தோளப் புடுச்சுண்டி கரயத் தொடங்குனா. கார்லூசு, புனிதாவ நெஞ்சோட சேத்து அணச்சு புடுச்சாரு. ரெண்டுபேரும் சேந்து கரயத் தொடங்குனாவு.
ரெண்டு பேருக்க கண்ணுலேந்தும் கண்ணீரு சரசரண்ணு வடுஞ்சிண்டிருந்தது.
வீட்டுக்கு வெளியில வளந்த கோழிவ செம்புறாந்துக்க பேடி இல்லாம வெளையாடுண்டிருந்ததுவ.
-----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment