Tuesday, March 3, 2015

கல்வி

இரத்தமும் சதையுமான
உடல்கள்
இடிபட்டு துள்ளுகின்றன
ஆச்சி சாம்பார் பொடி
ஆக்கும் அவசரத்தில்
இடித்துக் கொண்டிருக்கின்றன
கல்லூரிகள்
------------------------------------------

Wednesday, February 25, 2015

கழியல்பாடல்:நெல்லுக்குத்து

கழியல்பாடல்:நெல்லுக்குத்து

கட்டையன் நெட்டையன் காடக்கழுத்தன்
கருமிளகு செம்மிளகு காத்தாடி முண்டன்
கட்டிக் கடுமன்னாள் கடிதாவிக் காரி
கோடநரியன் முட்டகம் செந்நெல்
தட்டார வெள்ளை செம்பு மார்த்தாண்டன்
சடையானி சீவிற்கு சம்பா சீரழகி
பொட்டல் விளையும் புழுதிபுரட்டி
புனுகு சம்பா கடும்பாறை பிளப்பான்
வெட்டையில் முட்டி முட்டக்குறுவா
விரிபடகங்கன் வாசறு முண்டன்
திட்டமுடன் அயிக்கிராலி முதலாய நெல்லுகள்
தமிழ் நாடெங்கும் சீராய் விளைந்ததே
செங்கோடி வாலிபர் கண்டுமகிழ்ந்து
ஆடவும் பாடவும் கழியலடிக்கவும்                              - ஏலே

அதி விரைவாய் நெல் எடுத்து அன்புடன் அளிக்கிறோம்
தன்னன்னே னானன்னே தன்னா னன்னே னானோய்
தான னன்னே னானனன்னே தன்னானன்னே னானே

அவித்த தொரு நெல்லையெல்லாம் அன்புடனே விரிக்கிறோம்
- தன்னன்னே
விரித்ததொடு நெல்லையெல்லாம் அன்புடனே விரிக்கிறோம்
                                                                                    - தன்னன்னே
வட்டமாக நெல்லை போட்டு எட்டு பேரும் நெல்லரக்க
கூட்டமாக நெல்ல போட்டு கூடி நின்று நெல்லரக்க
- தன்னன்னே
தொலித்த தொரு நெல்லையெல்லாம் தாராளமாய் பாற்றோம்
சாவியதோர் அரிசில் எல்லாம் தாராளமாய் பாற்றோம்
ஈந்தகட்டு முறம் எடுத்து இருந்து பாற்ற என் விதியோ
                                                                                    - தன்னன்னே
இடது கையிலும் வலது கையிலும் மாறி மாறி
உலக்க பிடிக்க அடியேன் தலவிதியோ (2)                    - தன்னன்னே

உடையறுவா நெல்லரக்கி உடம்பெல்லாம் வலிக்குதையா - தன்னன்னே
- ஏலே
தீட்டினதோர் அரிசியெல்லாம் சந்தோசமாய்  பாற்றுறோம்
சின்னப் பொண்ணும் நெல்லரக்க சிங்கார பொண்ணும் நெல்லரக்க
மாமியாரும் நெல்லரக்க மருமகளும் நிக்கிறா
மூளிப்பொண்ணும் நெல்லரக்க மூதேவி பொண்ணும் நெல்லரக்க
கிழவியெல்லாம் நெல்லரக்க குமரியெல்லாம் நிக்கிறா
ஆலப்புழா யாவாரி அரிசி கணக்கு கேப்பாரே
ஈந்தக்கட்டு முறமெடுத்து இருந்து பாற்ற என் விதியே
சூரக்கட்டு முறமெடுத்து கூட்டிக் கொழிக்க என் விதியே
- தன்னன்னே
அடியறுவாள் நெல்லரக்கி ஆளுக்கு லாபம் இல்லையே
உடையறுவாள் நெல்லரக்கி உனக்கு லாபம் இல்லையே
பாமுறுவாள் நெல்லரக்கி பாதி லாபம் இல்லையே.

-          குமரி மாவட்ட மக்கள் பாடல்


பாடலை புரிந்து கொள்ள சிரமமாய் இருக்கலாம். குமரி மாவட்டத்தின் சிறப்பு கலைகளுள் ஒன்றான கழியலாட்டப் பாடலே இது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் செங்கோடி வாலிபர் கண்டு மகிழ்ந்து என்று வருகின்ற வரிகளை வைத்து அப்பகுதி கலைஞர்களுள் யாராவது எழுதியிருக்கலாம் என்று சொல்லலாம். ஆயினும் இப்பாடல் நான் முரசு கலைக்குழுவில் கலைஞனாய் இருக்கும்போது அக்குழுவைச் சார்ந்த அருட்பணி ஜாய் அவர்களிடமிருந்து சேகரித்தேன். பத்து வருடங்களுக்கு மேலிருக்கலாம் என்று நம்புகிறேன். 

Tuesday, November 13, 2012

தீபாவளி கவிதைகள் 2- தீபாவளி பலகாரங்கள் ருசிப்பதில்லை

தீபாவளி பலகாரங்கள் ருசிப்பதில்லை

மதுநனைந்த புத்தாடைகளுடன்
ஒரு இளைய கூட்டம்
வெடித்துக் கொண்டிருந்தது

அவர்களையேப் பார்த்தப்படி
குந்தியிருந்த அசோகன்
ஒரு தேநீர்குடிக்கலாம்
வாவென்றான் என்னை

சூரிய ஒளி நுழைந்து
கிடந்த குடிசையினுள்
நானும் நுழைந்தேன்

வெளிக்காவல்
போலிருக்கிறது என்றேன்

பட்டாசுப் பொறியில்
குடிசை எரிந்தால்
பயந்து கிடக்கிறேன்
என்றான்


செய்திருந்த சுழியமும்
தேநீரும் வந்தது

குடிசைவீடுகளில்
பலகாரங்கள் ருசிப்பதில்லை
தீபாவளிக்கு
................................. இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.50 pm

தீபாவளிக் கவிதைகள் 1 - வர்சா அழுகிறாள்

வர்சா அழுகிறாள்

யாரோ சொன்னார்களாம்
பூவானம் அக்கினிப் பூக்களை
வானத்தை நோக்கித்
துப்பிக்கொண்டிருக்கையில்
காகங்கள் தங்கும்
மின்கம்பியில் பட்டு
பிடித்த தீயில்தான்
பக்கத்து வீட்டு மாமாவின்
முகம் கை வயிறு
வெந்து போனதென

வர்சாவின் அப்பா
பூவானத்தை கையிலெடுத்தப் போதெல்லாம்
அழுது கொண்டிருந்தாள் வர்சா

பின்
எந்த வெடியை எடுத்தாலும் அழுவது

என்பது
அனிச்சை சரடாய் நீண்டுகொண்டிருந்தது


வெடியும் புகையும் சிரிப்புமாய்
கலந்தெழுந்த பக்கத்துவீட்டின்
திசையைப் பார்த்தும் அழுது கொண்டிருந்தாள்

தீபாவளிக்குள்
கரைந்து விழுந்து கொண்டிருந்தது
அவளின் அழுகை
சிவகாசியில் வெடித்தபோது
அழமுடியாது இறந்துபோன
குழந்தைகளின் குரலாய்
...................... இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.25 pm



ஐரோம் சர்மிளா


ஐரோம் சர்மிளா...
போராளிகளின் தேவதை
போராட்டத் தின்னி
பற்றிப் பரவும் தீ
செங்கதிரின் உயிர்
பாறை உடைக்கும் வேர்நுனி
மனிதத்தின் பரப்பு இழுவிசை
உயிர் நனைக்கும் மழை
முளைத்தெழும் விதை
கலப்பை நுனி
கண்ணின் ஒளி
கவிதைகளுக்குள்ளிருக்கும் கண்ணிவெடி
அரிதாய் பூத்த சிறுத்தைப்பூ
..........................இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.00 pm

Sunday, November 11, 2012

இரா. அரிகரசுதன்


கவிஞர் இரா. அரிகரசுதன் 
(படம் எடுத்தவர் சுக்னேஸ்வரன்,  மயிலாடுதுறை)

Saturday, November 19, 2011

வழியனுப்ப வந்தாள் யாழினி

எங்க போறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?
விளக்கிக் கொண்டிருந்தேன்.

எங்கபோறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?

அங்கபாரு குருவி சத்தம் கேட்குதா?
அண்ணாந்து பார்த்தாள்
இலைகளால் வசியம் செய்யும்
நிமிர்ந்த அரச மரம்

ஐ... மாமா... குருவிச்சத்தம்!
அது கிளிக்க சத்தம்.
கிளி எப்படி சத்தம்போடும்?
கீ..கீ..ண்ணு சத்தம்போடும்.
கிளி எப்படி சத்தம் போடும்?

கிளி இருக்குல்லா... கிளி இருக்குல்லா....
அதுஉ கீ.. கீ...ண்ணு சத்தம்போடும்.
எப்படி சத்தம்போடும் சொல்லு..
கீ... கீ...ண்ணு சத்தம்போடும
சத்தமா சொல்லு பாப்போம்.
கீ... கீ....

கிளியின் சிரிப்பில் பேருந்துகள் அசைந்தன
அவள் சத்தத்தை அவளே நம்பாமல்
கட்டிப்பிடித்துக் கொண்டாள்
உயிர்கூட்டுக்குள் ஈரத்தென்றல்

பயணிகளின் பார்வையில்
நானும் யாழினியும்
யாழினியின் அப்பாவும்

முகங்களில் குதிக்கும் முயல்குட்டியின் வசியத்தில்
மயங்கின சில பேருந்துகள்.

மாமாவுக்கு டாட்டா சொல்லு!
டாட்டா....!     
டாட்டா.....!

அப்பா, மாமா எங்க போறாங்க...?

................ இரா. அரிகரசுதன், 20.11.2011,1.00 am

Friday, September 16, 2011

கூடங்குளம் உண்ணாவிரதப் போராட்டம்

எம் மக்கள் அங்கே
மயங்கி விழுந்து கொண்டிருக்கையில்
பொய்யை மலை மலையாய் வாரி இறைத்துக் கொண்டிருக்கும்
அணுசக்தி விஞ்ஞானிகளே அதிகாரிகளே உங்கள் இதயங்கள் என்ன
இரும்பால் ஆனாதா?
எம் கவிஞர்களின் வாயால் அறப்பாட்டு
வீசி எறியப்பட்டால் இந்த உலகமே தாங்காது?

வேண்டாம் என் அன்பு விஞ்ஞானிகளே
உங்கள் இதயத்தை கொஞ்சம் திறந்து வையுங்கள்
நீங்கள் உங்கள் மனைவியருடனும் காதலியருடனும்
களித்து பிறந்த பிறக்கப்போகிற
உம் குழந்தைகளுக்காகவும்தான்
போராடிக்கொண்டிருக்கிறோம் நாங்கள் என்பதை
ஏற்றுக் கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் பரிசோதனைகளை
பரிசோதித்து எங்களை மண்ணழித்துவிடாதீர்கள்
உங்கள் மௌனங்களை சற்று கலைத்து
சொல்லுங்கள்

நீங்கள் சொன்னால் யாரும் கேட்பர்
ஏனென்றால் நீங்கள் விஞ்ஞானிகள்
உண்மையையைச் சொல்லுங்கள்
நீங்கள் நம்புகின்ற இறைவனுக்காகவாவது
அல்லது நீங்கள் விரும்புகின்ற அறிவியலுக்காகவாவது
உண்மையாயிருங்கள்


இருபதாயிரவருட கதிர்வீச்சு
ஆபத்து அங்கே உறங்கிக்கிடக்கின்றது
என்கின்ற உண்மையை
மனிதனுக்காக மட்டுமல்ல
அனைத்து உயிர்களுக்கவும்
இந்த உலகிற்காகவும் எடுத்துச் சொல்லுங்கள்

சவால் விட்டுச் சொல்லுங்கள்
மின்சாரம்தானே
நாங்கள் சூரியனை பிழிந்து
தருகிறோம் என்று உரக்க கூறுங்கள்


பணம் என்ன பணம்
எம் மக்கள் உயிர்தான் அரிது
என்று அவர்கள் காதுகளில் விழும்படி
சொல்லுங்கள்

சொல்லிவிட்டு வாருங்கள்
இதோ எம்மக்கள் இருக்கும்
உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே
அல்ல எம் மக்களின் இதயத்திற்கு உள்ளே
உங்களுக்கு கோவில் கட்டி தருகிறோம்.

வருவீர்களா..? வருவீர்களா..?
----
இரா. அரிகரசுதன், 17.09.2011