Wednesday, February 25, 2015

கழியல்பாடல்:நெல்லுக்குத்து

கழியல்பாடல்:நெல்லுக்குத்து

கட்டையன் நெட்டையன் காடக்கழுத்தன்
கருமிளகு செம்மிளகு காத்தாடி முண்டன்
கட்டிக் கடுமன்னாள் கடிதாவிக் காரி
கோடநரியன் முட்டகம் செந்நெல்
தட்டார வெள்ளை செம்பு மார்த்தாண்டன்
சடையானி சீவிற்கு சம்பா சீரழகி
பொட்டல் விளையும் புழுதிபுரட்டி
புனுகு சம்பா கடும்பாறை பிளப்பான்
வெட்டையில் முட்டி முட்டக்குறுவா
விரிபடகங்கன் வாசறு முண்டன்
திட்டமுடன் அயிக்கிராலி முதலாய நெல்லுகள்
தமிழ் நாடெங்கும் சீராய் விளைந்ததே
செங்கோடி வாலிபர் கண்டுமகிழ்ந்து
ஆடவும் பாடவும் கழியலடிக்கவும்                              - ஏலே

அதி விரைவாய் நெல் எடுத்து அன்புடன் அளிக்கிறோம்
தன்னன்னே னானன்னே தன்னா னன்னே னானோய்
தான னன்னே னானனன்னே தன்னானன்னே னானே

அவித்த தொரு நெல்லையெல்லாம் அன்புடனே விரிக்கிறோம்
- தன்னன்னே
விரித்ததொடு நெல்லையெல்லாம் அன்புடனே விரிக்கிறோம்
                                                                                    - தன்னன்னே
வட்டமாக நெல்லை போட்டு எட்டு பேரும் நெல்லரக்க
கூட்டமாக நெல்ல போட்டு கூடி நின்று நெல்லரக்க
- தன்னன்னே
தொலித்த தொரு நெல்லையெல்லாம் தாராளமாய் பாற்றோம்
சாவியதோர் அரிசில் எல்லாம் தாராளமாய் பாற்றோம்
ஈந்தகட்டு முறம் எடுத்து இருந்து பாற்ற என் விதியோ
                                                                                    - தன்னன்னே
இடது கையிலும் வலது கையிலும் மாறி மாறி
உலக்க பிடிக்க அடியேன் தலவிதியோ (2)                    - தன்னன்னே

உடையறுவா நெல்லரக்கி உடம்பெல்லாம் வலிக்குதையா - தன்னன்னே
- ஏலே
தீட்டினதோர் அரிசியெல்லாம் சந்தோசமாய்  பாற்றுறோம்
சின்னப் பொண்ணும் நெல்லரக்க சிங்கார பொண்ணும் நெல்லரக்க
மாமியாரும் நெல்லரக்க மருமகளும் நிக்கிறா
மூளிப்பொண்ணும் நெல்லரக்க மூதேவி பொண்ணும் நெல்லரக்க
கிழவியெல்லாம் நெல்லரக்க குமரியெல்லாம் நிக்கிறா
ஆலப்புழா யாவாரி அரிசி கணக்கு கேப்பாரே
ஈந்தக்கட்டு முறமெடுத்து இருந்து பாற்ற என் விதியே
சூரக்கட்டு முறமெடுத்து கூட்டிக் கொழிக்க என் விதியே
- தன்னன்னே
அடியறுவாள் நெல்லரக்கி ஆளுக்கு லாபம் இல்லையே
உடையறுவாள் நெல்லரக்கி உனக்கு லாபம் இல்லையே
பாமுறுவாள் நெல்லரக்கி பாதி லாபம் இல்லையே.

-          குமரி மாவட்ட மக்கள் பாடல்


பாடலை புரிந்து கொள்ள சிரமமாய் இருக்கலாம். குமரி மாவட்டத்தின் சிறப்பு கலைகளுள் ஒன்றான கழியலாட்டப் பாடலே இது. இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் செங்கோடி வாலிபர் கண்டு மகிழ்ந்து என்று வருகின்ற வரிகளை வைத்து அப்பகுதி கலைஞர்களுள் யாராவது எழுதியிருக்கலாம் என்று சொல்லலாம். ஆயினும் இப்பாடல் நான் முரசு கலைக்குழுவில் கலைஞனாய் இருக்கும்போது அக்குழுவைச் சார்ந்த அருட்பணி ஜாய் அவர்களிடமிருந்து சேகரித்தேன். பத்து வருடங்களுக்கு மேலிருக்கலாம் என்று நம்புகிறேன். 

No comments: