Tuesday, July 28, 2009

சயனைடு தாருங்கள்



சயனைடு தாருங்கள்
-ரெஜின் ரோஸ்

தண்ணீர் விட்டு
வளர்க்கவில்லை . .
நாங்கள்
கண்ணீராலும் காக்கவில்லை.

என்றாலும்,
துடுப்பு இடும் இடமெல்லாம்
பயிர் விளைந்தது
எங்களுக்கு

எங்கள் அம்மையும்
ஆத்தாளும்
வயிற்றைக் கட்டி
வாயைக் கட்டி
எதையும் சேர்த்ததாக
நினைவில்லை

நாங்கள்
உபரியாய் சேர்த்ததெல்லாம்
எங்கள்
உயிர் மட்டும்தான்
அதையும்
செலவழிக்கத் துடிக்கிறது
சிங்கள அரசுத் துப்பாக்கி

குறித்துக்கொள்
இலங்கை கடல் எல்லைக்குள்
நுழைந்தால்
சுட்டு வீழ்த்துவானாம்

இதுவரை வீழ்த்திய பிணங்களை
சுமந்த அவன் துப்பாக்கி
வெறிபிடித்து அலைகிறது

நான் உயிர்கூட்டி சேர்த்த
மீனை விற்று வாங்கிய
உன் துப்பாக்கி
என்ன செய்கிறது?

வலை மட்டும் சுமந்து திரியும்
என்
வெற்றுப்படகைக் காக்க
ஒரு தோட்டாவை
செலவழிக்க மாட்டாய்
உனக்கு ரஷ்ய நீர்மூழ்கி
எதற்கு
தெப்பம் விடவா . . .
பதிலாக கொஞ்சம்
சயனைடு வாங்கிக்கொடு..
----

No comments: