கட்டுரை-அறிவியல் மக்களுக்கே
இரா. அரிகரசுதன்
பாம் ... பாம்... அலறி கொண்டு செல்கிறது பேருந்து. புழுதிப்படலம், கண்களை சுருக்கிக் கொண்டோ கையை கண்ணிற்கு பாதுகாப்பாக குடைபோல் வைத்துக் கொண்டோதான் பார்க்க முடிகிறது.
“ஹலோ.. ஹலோ.. வாங்கி டி, காபி, பஜ்ஜி, வடை..
அண்ணே என்னவேணும் டீ, காப்பி. பஜ்ஜி சூடா இருக்குண்ணே இப்பம் போட்டதுதான் சாப்பிடுங்க... மாஸ்டர் 2 ஸ்ட்ராங டீ போடுங்க” என்று படுஜோராக சத்தமாக (நமக்கு தொந்தரவுதான்) வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.
விற்பனையாளன் சத்தமாகப் அப்படி சொல்வது ஒரு இராகமாகவே இருக்கிறது. இதை “விற்பனை சந்தம்” கூடச் சொல்லலாம். எங்கள் வீட்டுத் தெருவிற்கு ஒருவர் பை, வளையல்கள், பொட்டு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களை விற்பனை செய்ய வருவார். அவர் சத்தமாக...
“பை... பை... பை..
பொட்டு, வளையல் ,
சீப்பு, கண்ணாடி கண்ணாடி“
என்று ராகத்தோடு கூவி விற்பனை செய்வதுதான் உடனடியாக எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
இப்படியே மோர், மீன், பழங்கள், காய்கறிகள் விற்பவர்கள் கூட அவர்களுக்கே உரிய தனி சந்தத்தை, இராகத்தை, உச்சரிப்பை கொண்டுள்ளார்கள்.
எங்க ஊர் சந்தையில் ஒரு அம்மா மீன் விற்பார்கள். சாளை, நெத்தலி, வங்கடை, முரல், குத்தா, குதுப்பு, பன்னா என்று வித விதமாய் மீன்களின் பெயர் சொல்லி கூவி விற்பார். எனக்கு இன்னும் மறக்காமல் மனதில் கிடப்பது
“வங்கட வங்கட வங்கடயோ
வங்கட தின்னா சங்கடம் தீரும்
வங்கட வங்கட வங்கடயோ“ எனும் வரிகள் தான்.
இப்படி பலவாறு யோசித்துக் கொண்டே நின்ற என் பார்வை அருகில் வந்தமர்ந்த இரு பெண்கள் பக்கம் திரும்பியது. சற்று வயதானவர்கள் ஒருவர் ஞாயமாகவும் இன்னொருவர் சற்று குண்டாகவும் இருந்தார்கள்.
“எக்கா.... அன்னாதான் மினிபஸ்சு நிக்குதுல்லா, அதுல போவ வேண்டியதுதான. எதுக்கு பெரிய பஸ்சுக்கு காத்திருக்கிறீங்க.......? ” “யம்மா, அத ஏன் கேக்குறா?
இந்த மினிபஸ்சுகாரனுவளுக்கு பிளைட் ஓட்டுறோம்ணு நெனப்பு. அவன் போற வேகத்துல வண்டி குலுங்கி குலுங்கி முதுகெல்லாம் வலி. கட்டர் கிடந்தாலும் மெதுவா போகாம, வேகமாதான் அதுலயும் ஏத்துவான். சீட்டுலயே ஆள தூக்கி தூக்கி போடும். கொஞ்சம் கவனம் மாறிச்சுண்ணு வச்சுக்க முதுகெலும்புல டாம்னு கேக்கும். ” “எக்கா முதுகெலும்புல சும்மா லேசா தட்டுபட்டாலே. அப்புறம் சிக்கலுதான் மருந்த குடிச்சிட்டே இருக்க வேண்டியதாகி போகும். ”
“அது சரிதான் மெதுவா போப்பாண்ணு யாராவது சொல்லிட்டா போதும். இந்த பயலுவளுக்கு மூக்குக்க மேல கோவம் வந்துரும். ” “அடியிடி பட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சின்னா இவனா வந்து பண்டுவம் பாப்பான். என்ன செய்யது..? நீயும் நானுந்தான் இப்படி பொலம்பணும் என்னைக்குதான் இவனுவளுக்கு புத்தி வருமோ தெரியாது. அதனால் தான் பெரிய பஸ்சுலயே போயிருலாம்ட்டு நிற்கேன். நீ எங்க போறதுக்கு நிக்கா......? ” மிக சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த எனக்குள்ளும் சில கேள்விகள் எளவே செய்தன. சிற்றுந்து, பேருந்து எங்கு பார்த்தாலும் இப்போது பெரிய பெரிய டப்பாக்கள வைத்து காது கிழிய பாட்டப் போட்டு படுத்தப் பாடுயிருக்கே......... அத சொல்லி மாளாது. இதுல டிவிடி, டிஜிட்டல் சவுன்ட்ஸ் அப்படி இப்படிண்ணு கண்ணாடில வேற எழுதிபோட்டிருக்கும், ஆனா எந்த எந்த ஊரு வழியா போகும்ணு ஒரு போடு கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்பில் சிறந்த கண்டுபிடிப்பே வானொலி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது சமூகத்திற்குள் எப்படி பயன்படுகிறது என்பதே கேள்வி.
எப்பொழுது பாத்தாலும் ஹலோ எப்.எம் கால்ரா எப்.எம்-ண்ணு போட்டு மனுசனை நோகடிக்கிறதே வேலை. இதுல போன் பண்றதுக இளிக்க இளிப்பக் கேட்டா கொடுமடாச் சாமி.. நான் மூணுமாசமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
இப்பதான் லைனு கெடச்சி. ரொம்ப சந்தோசமா இருக்கு, சந்தோசத்துல எனக்கு பேச்சே வரமாட்டோங்குது.... அப்படி இப்படிண்டு.. பேச்சு வந்தா மட்டும் என்ன பேசிரும்ணு நினைக்கிறீங¢க? உருப்படியா ஒரு குஞ்சு கூட பேசாது. இப்படி நம்ம எரிச்சல்களையும் வேதனைகளையும் கொட்டிதீத்தா தமிழ் நாடே குப்பையா போவும். இதயே ஏன் மக்களுக்கு பயன்படும் படியா மாத்தக் கூடாது.....?எப்படி மாத்துறது......? ஒரே ஒரு எடுத்துக்காட்டப் பார்ப்போம். பேருந்து பயணத்தின் போது ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரையும் பதிவு செய்து பேருந்திலேயே அறிவிப்பு செய்தால்
1. கூட்டநெருக்கடியில் எந்த இடம் வந்திருக்குண்ணு குழப்பம் இலல்லாம தெளிவா இறங்கலாம்.
2. இரவு நேரங்களில் நிறுத்தத்தின் அடையாளம் தெரியாமல் தவிப்பதை தவிர்க்கலாம்.
3. புதிய ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள் அருகிலிருப்ப வர்களை கேட்டுக் கொண்டே வரவேண்டியத் தேவையில்லை.
4. கண்பார்வையற்றோர் போன்றவர்களுக்கு (நிறுத்தத்தின் பெயரை) இடத்தை அறிவிப்பதன் மூலம் உதவிகரமாய் இருக்கும்.
5. செய்திகள், பேரிடர் அபாய அறிவிப்புகளையும் தெரிவிக்கலாம்.
6. பேருந்துகளுக்கிடையேயான தகவல் தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம் சாலை பழுதாகி கிடப்பதை, சாலை பணிகள் நடப்பதை, வாகன நெருக்கடி போன்றவைகளை முன்னறிவிப்பு செய்வதன் மூலம் காலதாமதவது, எரிபொருள் விரயம் ஆவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். 7. நீண்ட தூரப் பயணத்தின்போது, ஆறுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (கயத்தாறு , எட்டையபுரம் போன்ற) பற்றிய வரலாற்று தகவல்களை அறிவிக்கலாம்.
இன்னும் இப்படி நிறைய நன்மைகள் கிடைக்கும். நீங்களே யோசிங்க அறிவியல் கண்டுபிடிப்ப கொஞ்சமாவது சமூகத்துக்கு, மக்களுக்கு பயன்படும்படி நாமயோசிக்கலண்ணா அறிவியல் வேஸ்டுதாங்க...“ கண்டுபிடிச்ச விஞ்ஞானிகளை எல்லாம் முட்டாப் பயலுவண்ணு நாம சொல்லாம சொல்லோம்ணு” அர்த்தமுங்க...
அறிவியல் மக்களுக்குங்க. நாமதான் அந்த மக்களுங்க.
அனலி, செப்டம்பர் 2006 இதழில் வெளியானது
No comments:
Post a Comment