Monday, July 27, 2009

உடைந்து கிடக்கிறது நிலா




உடைந்து கிடக்கிறது நிலா
-- மலையன்

உடைந்து கிடக்கிறது
நிலா
நாய்கள் ஊளையிடுகின்றன
வாடைக்காற்று வீச வீச
சகிக்க முடியவில்லை

கிழிந்து தொங்கும்
சாக்குக்கடியில்
குழந்தையின் குரலாய்
பசியின் அழுகை

இழுத்து அணைத்து
முட்டித் திணிக்கிறாள் தாய்
நடுநடுங்க

சப்பி சப்பிப் பார்க்கிறது
குழந்தை
வறண்டு கிடக்கின்றன
உயிரூற்றுகள்

எரியும் பசி
நெம்பித் தள்ள
நறுக்குக் கடி

பால்சுரக்கும்
முலைக்காம்பில்
இரத்தம்... இரத்தம்...?

வாடைக்காற்று வீச வீச
நாய்கள் ஊளையிடுகின்றன
உடைந்து கிடக்கிறது நிலா
சகிக்க முடியவில்லை...
சகிக்கவே முடியவில்லை...

.....

No comments: