Thursday, August 6, 2009

மண்சோறு

மண்சோறு
- மலையன்

அம்மா பசிக்குவும்மா... தயங்கி தயங்கி கேட்ட ஈரம் வற்றிக் காய்ந்து வெடித்துக்கிடந்த என் உதடுகளில் மெதுவாய் மிகமெதுவாய் முத்தமிட்டாள் அம்மா.
அந்த முத்தத்திற்காய் நிமிர்ந்தஎன் ஏக்கம் நிரம்பியக் கண்ணில் அம்மாவின் பளபளத்தக் கண்ணீர் துளிவிழுந்து கரித்தது, நெஞ்சில் சுரக்கும் பாசத் தவிப்போடு என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள் அம்மா.
அம்மாவின் இடுப்பை ரெண்டு கையாலயும் சுத்தி இறுக்கி பிடித்த நான் அவளின் வறண்ட இடுப்பை தொட்டு தடவினேன், சிலிர்த்துக் கொண்டாள் அம்மா.
“பசிக்குவும்மா...”
ஏதாவது தரமாட்டாளாங்ற பரிதாபத்தோடு மீண்டும்நான் ..
தாங்க முடியாதவளாய் கண்ணீரோடே அம்மா பேசினாள்.
“பொறுத்துக்கடா ..”
“என்னம்மா நீ எப்பம் பசிக்குவுண்ணாலும் இதையேச் சொல்லா..., எதாவது இருக்குண்ணா திங்கத்தாம்மா ..”
ஒருவித ஆத்திரத்தோடு அம்மாவுக்கச் சேலையைப் பிடிச்சு இழுத்தேன்.
“நான் என்னச் செய்வேன் எனக்குப்பசி. எதாவது திங்கத் தந்தா என்னவாம் .. இரண்டுநாளா ஒண்ணும்திங்காம வெறந் தண்ணிய தண்ணியக் குடிச்சுட்டு வயித்தப் பிடிச்சுக்கிட்டே தூங்கிப்போறேன்.”
ஒண்ணுமே சொல்லாத அம்மா அடுப்பங்கரைக்குள்ள போய் ஏதோ டப்பாவ உருட்டச் சத்தம் கேட்டது.
கொஞ்சநேரம் கழித்து திரும்பி வந்த அம்மா, இதக்குடிண்ணு ஒரு கப்பு நிறைய கருப்புகலர்ல தண்ணி தந்தா.
என்னதும்மா இதுண்ணு கேட்டுட்டே பசியில் வாங்கிக் குடித்தேன் எனக்கு முதல் மடக்குல என்னதுண்ணு கண்டுபிடிக்கமுடிய.
கருப்பட்டியையும் புளியையும் சேத்துக் கரைச்சுக் கொண்டு வந்திருக்கா அம்மா!
“அப்படியே இனிப்பும் புளிப்புமாட்டு தொண்டய நனச்சிட்டு போன அந்த தண்ணி வயத்துக்குள்ள சத்தம் போட்டுட்டே சிந்தினது போல இருந்து.”
அவசரம் அவசரமா குடிச்சதுல வாயில வழிஞ்சத் தண்ணியக்கூட துடைக்காம அம்மாவுக்க முகத்தப் பாத்தேன்.
முந்தானய எடுத்து என் முகத்த தொடச்ச அம்மாவுக்க சேலையில வியர்வையும் அம்மாவும் கலந்த வாசன!
அப்படியே எனக்குள்ள எறங்கிய வாசன ... என் உடம்பு அப்படியே நடுக்கத்துல ஆடிபோச்சி.
டக்குண்ணு அம்மா அப்படியே இழுத்து என்னிய இறுக்கி அணைச்சி நடு நெத்தியில் ஈரத்தோட முத்தம் தந்தா..
எனக்கு ஏதோ புரிஞ்சதுபோல இருந்து. அதுக்க மேல ஒண்ணும் கேட்கத் தோணல..
வீட்டுக்குள்ள பாய் மேல விரித்த அப்பாவுக்க வேட்டியில படுத்து உறங்கிட்டிருந்த தங்கச்சிக்க அனக்கம் கேட்டு அம்மா என்ன விட்டுட்டு தங்கச்சிக்கப் பக்கத்துலப் போய் லேசா தட்டிவிட்டா ..
முனகிகிட்டே தங்கச்சி திரும்பவும் தூங்க ஆரம்பிச்சிட்டா .. அப்பம் அம்மாவுக்கு முகத்தில இருந்த பரானத்தப் பாக்கும் போது எனக்கு பரிதாபமாட்டு இருந்து. ஒரு வேளை தங்கச்சியும் முழிச்சி பசியில அழுதுட்டா என்னச் செய்யதுண்ணு தெரியாம அம்மா பரானப் பட்டிருப்பாண்ணு நெனைக்கிறேன்.
தங்கச்சிக்கு ரெண்டு வயசுதான் ஆச்சி ஆனாலும் சரியான புத்தி, நல்லா பேசுவா, என்னிய அக்கா அக்காண்ணு போட்டு உயிர எடுத்துருவா.
தங்கச்சி பெறந்த கொஞ்ச நாள்லயே கிணறு வெட்டப் போன அப்பா கிணறு இடிஞ்சி விழுந்து செத்து போனாரு ..
அப்பாவுக்க வேட்டிய பெட்டிக்குள்ள இருந்து அம்மா அடிக்கடி எடுத்துப் பாப்பா .. அப்படியே நெஞ்சுல போட்டு கண்ண மூடி அசையாம நிப்பா. கொஞ்ச நேரம் கழிச்சி அழுதுட்டே வேட்டிய உள்ள வைப்பா.
அப்பல்லாம் எதுக்கு அம்மா அழாண்ணு எனக்குத் புரியாது. ஒருவேள அப்பா இருந்திருந்தா திங்க எதாவது கிடச்சிருக்குமோ என்னவோ ..
எனக்கே பசி தாங்க முடியல, தங்கச்சியும் அழுதாண்ணா பாவம் அம்மா என்னதான் செய்வா! ..
கைல அறுவாவயும் கயிறயும் எடுத்துட்டு அம்மா வந்தா ..
வெளிய போகபோறா ...
ஐயோ, தங்சச்சி அழுதா நான் என்னச் செய்வேன்.
அம்மா எங்க போவ போறாண்ணு பக்கத்துல போய் நின்னேன் ..
“வெறவு வெட்டிட்டு வாறேன், ஒரு பத்து ரூவாவாவது கிடச்சாதான் உயிரோட இருக்கமுடியும்.
நீ தங்கச்சி முழிச்சிட்டா அழாம விளையாட்டு காட்டிட்டு இரு.”
அம்மா.. தங்கச்சி நல்லா அழுவாம்மா.. என்னால அவ அழுகய நிறுத்த முடியாது. நானும் பெறவு அழுவேன்னுட்டு அம்மாவ மறிச்சி நின்னேன்.
டக்குண்ணு அம்மா இரக்கமே இல்லாதவ மாதிரி கனத்த குரல்ல
என்னச் செய்ய முடியும் அழுதா விளையாட்டு ஏதாவது காட்டு நான் சீக்கிரம் வந்துருவேன்னு சொல்லிட்டு என்னிய அப்படியே நடையோட ஒதுக்கிட்டு பேசாம போயிட்டா..

நான் நடையில சாஞ்சி அம்மாவ பாத்துட்டே நின்னேன்.
அம்மா திரும்பியே பாக்கல வேகமா போயிட்டா.. எனக்கு அழுகையா வந்து.
சொல்லி வச்சதுபோல அம்மா போன உடன தங்கச்சி முழுச்சி அழ ஆரம்பிச்சிட்டா..
ஓடி போய் அவள எடுத்தேன்.
ஐய்.. செல்லக்குட்டி ஏன் அழாண்ணு அவளை அப்படியே தூக்கி இங்கபாரு இங்கபாருண்ணு சும்மா அண்ணாந்து கை காட்டினேன்.
அங்க ஓட்டை விழுந்த குடிசதான் தெரிஞ்சி.
அந்த ஓட்ட வழியா சூரிய ஒளி அப்படியே பாய்ஞ்சி சாணி தரையில விழுந்தது.
அந்த ஒளி வந்த பாதயில அப்படியே தூசி தூசியா பறக்குது.
ஒரு நிமிசம் எனக்கு தோணிச்சி அந்த தூசிக்கு பதிலா சோறா பறந்துண்ணா எப்படியிருக்கும்ணு..
தங்கச்சிக்க அழுகை நின்னபாடில்ல, ஒரு நிமிசம் கைகாட்டின திசையில பாத்தவ ஒடனயே அழ ஆரம்பிச்சிட்டா.. அவளுக்க அழுகைய என்னால சகிக்க முடியல..
அம்மா, அம்மாண்ணு அழ ஆரம்பிச்சிட்டா.. அழாதண்ணு அவளை இடுப்புல வச்சி ஆட்டிட்டே இருந்தேன். மூஞ்சியோடவச்சி பிராண்டிவுட்டுட்டா.. வலி தாங்க முடியல.
அவ என்னச் செய்வா அவளுக்கும் பசிக்குவு... அப்படிதான் பிராண்டுவா..
முத்தத்துல கொண்டு இருத்தினேன், ஆனாலும் அழுதுட்டே இருந்தா.
திண்ணையில கிடந்த செரட்டய எடுத்து அவளுக்க பக்கத்தில போட்டுட்டு, ஐய் இதப்பாரு இதப்பாருண்ணு சொல்லிட்டு இருக்கும்போது திடீர்ணு எனக்கு அம்மா தந்த கருப்பட்டி தண்ணி ஞாபகத்துல வந்துச்சி.
ஓடி அடுப்பங்கரைக்குள்ள போனேன். இரண்டு மூணு டப்பா கண்ணுக்கு தெரிஞ்சி, ஒவ்வொண்ணா திறந்து பாத்தேன்.
ஒரு டப்பால கருப்பட்டி வாசம் அடிச்சி ஆனா உள்ள ஒண்ணும் இல்ல, புளி டப்பாவுலயும் ஒண்ணும் இல்ல. இருந்ததெல்லாம் வழிச்சி எடுத்து எனக்கு தந்திருக்கா அம்மா. என்னச் செய்யதுண்ணே தெரியல, அப்படியே நின்னுட்டேன்.
மண்பானை கண்ணுல தெரிஞ்சி வேற வழியில்லாம ஒரு கப்புல தண்ணியக் கோரிட்டு போனேன். மண்ணப்போட்டு ராவிட்டே அழுதுட்டு இருந்தவள தூக்கி மடியில உக்காரவைச்சி தண்ணியக் குடிக்க கொடுத்தேன்.
வாயில தண்ணிய வச்சல, தட்டிவிட்டுட்டா.. தண்ணீ சிந்தி மண் ஈரமாயிட்டு.
இப்பம் பாத்து அம்மா வந்துரமாட்டாளாண்ணு பாதைய பாத்தேன். அதெப்படி இப்பம் வருவா..?
குட்டிம்மா அழாத.. நாம சோறு பொங்கி விளயாடுவோம்ண்ணு செரட்டைய எடுத்தேன்.
சோறுண்ணு கேட்ட உடனயே சத்தமே போடாம அழுகைய நிறுத்திட்டா.. எனக்கு தாங்க முடியல.. மூணு கல்ல எடுத்து வைச்சேன். ஐ.. இங்க பாரு அடுப்பு அதுக்க மேல செரட்டைய வைச்சி, ஐயா..! அக்கா பானைய அடுப்புல வைச்சாச்சு.
தீ போடுவமா.. பக்கத்தில கிடந்த இலச் சருவ
போட்டு பூ.. பூண்ணு ஊதி தீ பத்தவச்சேன்.
ம்.. இனிம அரிசிபோடுவம்.. ஏற்கனவே ஈரமாகி கிடந்த மண்ணக் குழப்பி எடுத்து போட்டேன்.
பக்கத்தில நின்ன செடியில இருந்து இரண்டு இலையப்பிச்சி உள்ள போட்டேன்.
இங்க பாரு சோறு வெந்துட்டே இருக்குண்ணு ஒருசின்ன கம்பு குச்சிய எடுத்து சோத்த குழப்பிவிட்டுட்டே அம்மா வந்துரமாட்டாளாண்ணு பாத்தேன்.
எங்க..?
கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருந்தவ திரும்பவும் அழ ஆரம்பிச்சுட்டா.
நிப்பாட்ட முடியல.. எதாவது திங்க கொடுத்தே ஆவணும் இல்லனா அழுது அழுதே செத்துருவா போலயிருக்கு எனக்கு பயமா இருந்துச்சு.
அந்தச் செரட்டைய பாத்தேன்.
அதுக்குள்ள ஈரமண்ணு.
தங்கச்சிகிட்ட அழாதே நாம சோறு சாப்பிடுவுமாண்ணேன். ம்.. ம்ண்ணு தலைய ஆட்டுனா. ஒரு இலய பிச்சி அதல செரட்டையில இருந்த மண்சோற எடுத்து வைச்சேன்.
சோறு சாப்பிடு சோறுண்ணுட்டு அந்த ஈரமண்ண உருட்டி எடுத்து அவளுக்க வாயில வைச்சேன்.
வாய்ல வாங்குனவ துப்பிட்டா. சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சா இதுவரைக்கும் அழாத சத்தம், சத்தத்துக்கும் மேல..
அழுது அழுது கண்ணீரா கன்னத்துல வழிஞ்சிட்டு இருக்கு. இன்னங் கொஞ்ச நேரம் அழுதாண்ணா தொண்டக்குள்ளயிருந்து சத்தம்கேக்காது.
எப்படி இவளை தேத்த நான்..
திடீர்ணு நான் சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சேன். நான் அழுதத பாத்த தங்கச்சி பயந்து போய்ட்டா. என்னியவே உன்னிப்பா பாத்துட்டு இருந்தா. உங்கூட சண்டபோ.. நீ சோறு திங்கமாட்டேங்கா.. நான் திங்கபோறேன்.
ஒனக்கு தரமாட்டேன் ஆமா.. செரட்டைக்குள்ளயிருந்து மண்ண எடுத்து இலயில வைச்சேன். கறி வைக்கல, கீழ கிடந்த மண் கட்டி ஒண்ண எடுத்து இலையிக்க அருவுல ஊறுகான்னு சொல்லி வைச்சேன்.
தங்கச்சி என்னியவே பாத்துட்டு இருந்தா.
அழுக நின்னுபோச்சி.. ஊறுகாவ தொட்டு நல்லாயிருக்குண்ணு திங்க ஆரம்பிச்சேன்.
நாக்க அண்ணாக்குல தட்டி நொட்ட விட்டுட்டே சாப்பிட்டேன்.
ஈரமண்ணு யப்போ ஒருமாதிரியிருந்து. அப்பிடியே விழுங்கியாச்சு.
நான் தின்ன ஒடன தங்கச்சி அப்படியே என்னிய பாத்தா.. அப்பாடா வயிறு நெரம்பியாச்சுண்ணு வயித்த தடவிகிட்டே கேட்டேன். “பிள்ளக்கு வேணுமா?”
அக்கா, சோறு சோறுண்ணு வாய பிளந்தா..
கொஞ்சோல மண்சோற எடுத்து உருட்டி அவளுக்க வாயில வச்சேன். . .
எப்படியோ அத அவ தின்னுட்டா..
ஐயோ.. அம்மா.....
நான் வெடித்து அழுது கொண்டிருந்தேன்......

No comments: