அது உயிரோடு இருக்கிறது
- மலையன்
கொலை செய்வது எப்படி?
பகிரங்க கூட்டம்!
உயர்த்திய கைத்தடிகளோடு
வெள்ளை அங்கிகள்
அத்தரையும் பர்தாக்களையும்
சுமந்து கொண்டு தாடிகள்
விசம் தடவிய வெட்டரிவாள்கள்
ஏந்தி காவிகள்
வாய்க்கரிசி சுமந்து சுமந்து
கனத்துபோன சாதிகள்
கருத்த பூட்சுகளுக்குள்ளே
கொடிக்கம்பங்களை
சொருகிக் கொண்டு கட்சிகள்
கருவறை அறுத்த கையோடு
இரத்தம் சொட்ட சொட்ட
புத்தன் பெயர் பதித்த
கத்திகள்
எல்லோரும் ஒன்றுகூடி
ஓரே இடத்தில்
மண்விழ இடமில்லை..!
கொலை செய்வது எப்படி?
தாகம் தணித்து தணித்து
வெறியேற்றி புதிது புதிதாய்
கர்ப்பமூட்டப்பட்ட திட்டங்கள்
மலை மலையாய்
வளர்ந்து கொண்டேயிருக்க..
தூரத்தே
ஒரு ஓரமாய்
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேல்
சம்மணக் கால்போட்டு
நெஞ்சு நிமிர்த்தி தலை சாய்த்து
மெலிதாக சிரித்துக் கொண்டிருந்தது
அது..!
----------------------
10.08.2009
1 comment:
வணக்கம்
கவிதை யதார்த்தமாக உள்ளது.மூன்றாம் உலக நாடுகள் மனிதரை வாழவைப்பதற்குச் செலவு செய்வதைவிட மனிதரை அழிப்பதற்கு செலவு செய்வத அதிகம்.உலக உயிரினங்களில் தன் இனத்தைத் தானே அதிகம் அழிக்கும் விலங்கு அறு அறிவுபடைத்தவர் என்று சொல்லிக்கொள்ளும் மனிதனே.
...............செம்மதி..............
Post a Comment