கடைசியில் கொன்றார்கள்..!
- மலையன்
வைரம் பதித்த
மரப்பிடியுடன் கூடிய
நீண்ட கத்தியை
செய்து அனுப்பியிருந்தீர்கள்..
என் நெஞ்சுக்கு
கத்தி ஒன்றும் கண்காணா தேசமாய்
இருந்ததில்லை!
மின்னல் பாய்ந்த
கல்லை தேடிப்பிடித்து
கோடரி செய்து
கொடுத்து விட்டிருந்தீர்கள்..
என் வேர்கள்
கொல்லமுடியா கனவைப்போல
வலிமையானவையாக இருக்கின்றன!
பின்
உயிர் தின்னும் நாக்கை
பிடுங்கி எடுத்து
அஞ்சல் செய்திருந்தீர்கள்..
நானோ
ஏழுமலை ஏழுகடல் தாண்டி
எடுத்து வந்த புனித நீரால்
நனைத்து திருப்பியனுப்பியிருந்தேன்..
கடைசியில்
இரைதேடி பறந்துகொண்டிருந்த
அந்த காகத்தை
கண்ணிவைத்து பிடித்தீர்கள்,
அதன் இறக்கைகளை
மலம் நாறும் உங்கள் கால்களால்
அழுத்தி மிதித்துக்கொண்டு
அலகை கொரடு கொண்டு பிடுங்கினீர்கள்,
பின் விசம்தடவி, சாணைபிடித்து,
மறுபடியும் பொருத்தி
அன்பென்று பெயரிட்டு
அனுப்பி வைத்தீர்கள் ...
நான்
உயிர் உள்ள பிணத்திற்கு
கல்லறை கட்டிக் கொண்டேன்..
காலில் சிக்கியிருந்த
இதயத்தை
கொத்தி உதறிக்கொண்டிருந்தது
காகம்...!
----------------------
23.08.2009
No comments:
Post a Comment