கேசவன் என்பது நாய்
- மலையன்
கேசவனுக்கு ஒத்தக்கண்ணு
நீலக்கண்ணு
தலையில சொமடும்
தோள்ல தேங்கா தொங்கலுமாட்டு
ஆலமரத்தபோல நடந்துவருவாரு
தாத்தா..
கேசவனும் நானும்
கால சுத்தி சுத்தி வருவோம்
பொரிஉருண்டை கிடைக்கும்
கேசவனுக்கு இனிப்பு பிடிக்குமாண்ணு
எனக்கு தெரியாது...
குழம்பு, மீனு, கூட்டு
எல்லாத்தையும் போட்டு
பென பெனன்னு பெனைஞ்சி
யான கவளமா உருட்டுவாரு
எச்சில் ஊரும் நாக்கு தொங்க
காத்திருப்போம்
நானும் கேசவனும்
பல்லே இல்லாம
பனங்கிழங்கு திம்பாரு
மடக்கு கத்திய மண்ணுபோட்டு
தீட்டி கிழங்க தூவலா
செதுக்கி தருவாரு
அன்னத்தூவி தோத்துபோவும்!
கொஞ்சத்த கேசவனுக்க
வாயில இறுக்குவேன்..
இடிச்ச வெத்திலயில
பாதி எனக்கு
நல்லா சவச்சி ஒதப்பி
வாயில துப்பி கொடுப்பேன்
கேசவனுக்கு...
மதகு நெறைய
தண்ணி ஓடிச்சாடும்
தண்ணிக்கும் மதகுக்கும் இடையில
படுத்துக்கிட்டே பதுங்கிச் ஊர்வோம்
கேசவனும் நானும்
என் வாயில தண்ணி இருக்கும்
கேசவனுக்க வாயில
சோப்பு டப்பா இருக்கும்
விளைக்குள்ள மாடு மேயுதுண்ணு
விரட்ட போனவருக்க
தொடைய குத்தி கிழிச்சது மாடு
மாட்ட அடிச்சி வெரட்டிட்டு
மண்ணள்ளி போட்டு
தூண்ணு துப்பிக்கிட்டு நடந்தாரு
தாத்தா...
தாத்தா இல்லாத வீட்டுல
வேறயாரோ குடியிருக்க
கேசவன காணல
எனக்கு ஊரு போவ
பிடிக்கல...
---
03.09.2009
No comments:
Post a Comment