Sunday, October 4, 2009

தள்ளையும் பிள்ளையும்

தள்ளையும் பிள்ளையும்
-மலையன்


அனுபவத்தில் மூத்த
பாட்டியைப் போல கால்நீட்டி
உட்கார்ந்திருப்பாள்

நானே முதலில்
ஆடுவேன்

ஒரே முறையில் ஒருநாளும்
தள்ளையின் மேல் பிள்ளைகள்
விழுவதில்லை எனக்கு

வழக்கமான சிரிப்போடு
என் நெஞ்சையும் அள்ளுவாள்
குச்சிகளோடு

மிருதுவாக குச்சிகளை
தடவிக் கொடுப்பாள்
கண்ணோரத்தில் நான் கிடப்பேன்

தள்ளைமேல் கிடக்கும்
பிள்ளைகளை அனங்காமல் பிரித்தெடுப்பாள்
உடலின் சர்வமும் விழித்திருக்கும்

கண்ணைத்தாண்டி அவள்
கன்னம் அசையும்
காது சிலிர்த்து நிற்கும்

தள்ளைமேல் கிடக்கும்
ஒரே பிள்ளையைப்
பிரித்தெடுக்கும் வெற்றியின்
தருவாயில் பூரித்த உடலாய்
முகம் முருகும்

குனிந்து முகர்ந்து கொண்டே
மணக்கச் செய்த வாயால்
மெதுவாக ஊதுவேன்
அவள் காதில்

ஒரு முயல்குட்டி
மார்பில் உரசுவதுபோன்று
சிரித்து தலை சரிவாள்
குச்சிகள் அசைந்துவிடும்

சினுங்கிக்கொண்டே
சண்டைக்கு வருவாள்

சரி
அழிச்சாங் குழிச்சான்
விளையாடு என்பேன்

தலைமுடி பிடித்திழுத்து
சட்டன்று
கன்னத்தில் முத்தமிட்டாள்

உயிர் சிலிர்த்து
கன்னம் தடவினேன்

என்
உலகெங்கும் மணத்தது
ஈரமுத்தம்.

--
17.09.2009

No comments: