புளியங்கூட்டு
-மலையன்
மரக்குரங்குகளாய்
தொங்கிக் கிடப்போம்
புளியமரங்களில்
மிளகாயும் உப்புமான
உன் வருகையில்
செரட்டை நிரம்பி வழியும்
நொண்டங்காய்களால்
சுள்ளென்று சுவைக்கச் செய்யும்
கைமணத்தோடு மிகச்சரியாய்
கலந்து வைப்பாய்
உப்பையும் மிளகாயையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
கல் உலக்கைக்கு அடியில்
இடிபட்டு துள்ளும் நொண்டங்காய்கள்
பூவரசம் இலையை
தொடையில் துடைத்து
விரல் கொண்டு தடவுவாள்
புளியங்கூட்டை
நாக்கில் நீர் சுரக்கும்
அத்தனைபேருக்கும்
செரட்டையை நீயே
வைத்துக் கொள்வாய்
ஒற்றைக்காலில் தவம் செய்யும்
குருட்டுக் கொக்கைப்போல
நான் காத்திருப்பேன்
என்னை தெரிந்து கொண்ட
நீ
இறக்கைக்குள் அணைக்கும்
தாய்கோழியாய்
பொத்தி பொத்தி செல்வாய்
பூவரசம் இலையை நக்கிக்கொண்டு
விரல்பிடித்து நடக்கும்
ஒரு சிறுகுழந்தையைப் போல
உன் பின்னாலேயே வருவேன்
இலையைப் பிடுங்கிக் கொண்டு
உன் விரலைத் தருவாய்
சுவை தூக்கலாய் இருக்கும்.
----
18.09.2009
No comments:
Post a Comment