பூங்காக்களின் நகரம் பெங்களூரு
-மலையன்
செய்து வைத்த
சிரிப்புகளை பூசிக்கொண்டு
வெண்ணெயில் செய்த
முழங்கால்கள் பளபளக்க
இளம்பெண்கள்
குறிகளுக்கு மேலே
பெல்ட்டு கட்டி
தரையைச் சுத்தப்படுத்தும்
கால்சட்டைகளோடு
தோள்களை இழந்துபோய்
இளைஞர்கள்
கைப்பைகளிலும் செல்பேசிகளிலும்
கனவுகளை சொருகித்
திரியும் இவர்களுக்காய்
பசைதடவிய வலைகளோடு
விரிந்திருக்கும் சனி ஞாயிறுகள்
இரட்டை விலைகளால்
சுரண்டப்படுதலின் சுகத்தையும்
அடிமைப்படுதலின் ஆன்மீகத்தையும்
சுமந்து வேலைக்கு செல்வதும்
சந்தைக்கு செல்வதும் - என
பலிகொடுக்கவே வளர்க்கப்படும்
ஆடுகளின் கழுத்திற்காய்
சாணைத் தீட்டப்படும்
கத்திகளின் மினுமினுப்போடு
திறக்கப்படும் பூங்காக்களுள் புதைந்தவர்கள்
எழும்புகையில்
முட்டைக்காக வளர்க்கப்படும்
லக்கான் கோழிகளின் கால்களும்
இறைச்சிக்காக வளர்க்கப்படும்
பிராயிலர் கோழிகளின் கால்களும்
நடுங்கி விழுகின்றன
பூமியில் படும்போது
----
18.09.2009
No comments:
Post a Comment