Wednesday, September 19, 2007

கவிதைகள் - புதுவருட வருகைக்காய்



புதுவருட வருகைக்காய்...!

இரா. அரிகரசுதன்


தென்றல் உரசிய பூக்கள் சிலிர்த்தெழும்

மகரந்தம் சுமந்து தென்றல் உயிர்த்தெழும்

குமரிமுனையில் நுரைத்து குதித்தாடும் கடலலைகள்

கரையெங்கும் நண்டுகளின் கிறுக்கல் கவிதைகள்

சுவாசமாய் இறங்கி இயங்கும் பகுதிகளில், தன்

குதூகல தொடுதல்களால் மோன தவம்கலைக்கும்

மூலிகை சுமந்தாடி வரும் மருந்துவாழ்மலை காற்றன்

இங்கும் எங்குமாய் மழைச்சாரல்களோடு

புணர்ந்தாடி எழும் எங்கள் மருதநிலமண்வாசம்

கேசமாய் உலக்கையாய் குதித்தாடி

மல்லிகை தொடுதலால் உயிர்சிலிர்த்தும் மலையருவி

கனிந்து சிந்தும் வேர்பலா தேன்வாசம்

பித்தேறி கரடி கிறங்கி கைபோட

முள்ளம்பன்றி முள்பட்டு திகைத்தோட

பலாகிளை நின்று கனிபிளந்து

சுளை எறியும் மந்திகள் கைவிட்டு கைகொட்ட

விழுந்து தெறித்த பலாச்சேற்று குழியில்

மிளா பிடிக்கும் முதலை; மரமெங்கும்

கொடிகளாய் வெற்றிலை மிளகு வாசம் தெறிக்கும் கிராம்பு

காட்டாற்று புனலாடி கண்சிவந்து காரையேறும் தும்பி

பல்தீட்ட சாம்பல்தேடி இல்லாது பைமறந்து

கல்சுமந்து பாளங்களாய் முதுகில் கோடுகொண்டு

வெந்தழுது நொந்து விரையும் சிறுவர்கள்

வாய்மணக்கும் குழந்தை பாலுக்கு அழ

இரப்பர்பால் வெட்டும் விரல்கள் பதறி உதறும்

பச்சையுடம்பு உலைத்து உழைக்கும் தாய்கள்




கண்களில் கவிதைகள் தேக்கி

நினைவுகளில் இனிமை கூட்டி

சிட்டாய் சிறகு விரித்தெழும் இளைஞர்கள்

இவர்களோடு என் இதயத்தையும் மலர்த்தும்

ஏ தேனுதட்டு புதுவருட சிங்காரியே வருக !

உன் கரங்கள் வசந்தங்களை கொண்டு வரட்டும்

உன் பார்வையின் பதிவுகள் எங்கள்

கூன் விழுந்த முதுகுகளை நிமிர்த்து போடட்டும்



கஞ்சிக்காய் கதறி அழும் எங்கள் வயிறுகளில்

சிறிது அமிழ்தத்தை உதறிச் செல்

எங்கள் பாதைகளில் பல்காட்டும் முற்களின்

முதுகுகளை சிறிது முறித்துபோடு



எங்கள் இளைஞர்களின் மூளைகளில்

அக்கினி விதைகளைத் தூவிச் செல்

அந்த வெக்கையில்தான் இந்த பூமி

புடம்போடப் படவேண்டும்


சற்றே புன்னகை சிந்து - அதில்

எதிர்காலங்களின் எதார்த்தத்திற்காய்

கட்டுகின்ற எங்கள் கட்டமைப்புகள்

புதுப்பிக்கப்படட்டும்



உன் சிறகுகளின் தூவிகளில்

நீர் கொண்டு வா

அதன் குளிர்விப்பில் அன்பு பயிராகட்டும் !

நாளை இந்த தேசம் சமாதானத்தை

அறுவடை செய்யட்டும் மகிழ்ச்சி பரவட்டும் !!




14.04.2006








No comments: