Saturday, March 6, 2010

ஆப்பரேசன்

ஆப்பரேசன்
இரா. அரிகரசுதன்

இரத்தம் சேறாகி
நிற்கும் நிலத்தில்?
கொத்தி போட்டிருக்கும் நாத்துகள்போல
உறுப்பின் முன்பின் பக்கவாட்டிலெல்லாம்
காந்தலோடு கிடந்தன மயிர்கள்

அவிழ்ந்த ஆடையோடு
திறந்துவிட்ட தண்ணீரின் சத்தத்தில்
பயமும் நனைந்து கொண்டிருந்தது

அதிராத நடையில்
படுக்கைநோக்கியப் பயணத்தில்
பசித்த புலிக்கண் கொண்டு
அந்த கத்தி பார்த்துக் கொண்டிருந்தது

அடுத்து அறுக்கவேண்டிய பொருள்
நடந்து கொண்டிருக்கின்றது

பூட்டுக் கயிறாய் சுருண்டுக்கிடந்த
என் நடு முதுகெலும்பில்
கொசு வாய்க்கூர்மையுடன்
இறங்கியது மயக்க மருந்து

கல்யாண வீட்டில் பந்தி பரிமாறும்
அவசரத்தோடு சரக் புரக்கென்று
வெட்டிக் கொண்டிருந்தார்கள்

எலிகரம்பிய உள்ளுணர்வு உந்த
மரத்துக்கிடந்த பகுதிக்குள்
கவனத்தை காய்ச்சி ஊத்திய நான்
வலிகண்டால் என பயந்து

ஓடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டேன்

ஆப்பரேசன் தியேட்டரில் இளையராஜா
மருந்து விற்றுக் கொண்டிருந்தார்

காற்று பெருமூச்சாய் வாய்வழி
சிந்திக் கொண்டிருக்க
நாவரண்டு தவித்த நிலையில்
வேதனையின் ஒலி நழுவி விழுந்தது

தண்ணீ தண்ணீ

தாகத்துக்குதான் ஊசி போட்டிருக்கு
எல்லாம் முடியட்டும் பேசாம படு

காற்றடித்து செத்துகிடக்கும்
பூவின் பிணத்தை யானை மிதித்தது
யாருக்குத் தெரியும்

கடைசியில்

எல்லாம் முடிஞ்சாச்சு நாக்க நீட்டு
அறுத்த கத்தி நாக்கை எழுப்பியது

பச்சை ஆடையில்
சிரித்துக் கொண்டிருந்தாள்

எழும்பிய நாக்கில்
வழிந்து கொண்டிருந்தது கவிதை

05.03.2010


02.03.2010 அன்று நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனையில் எனக்கு சிறு அறுவை சிசிட்சை நடந்தது. அந்த நிகழ்வை கவிதையாக்கிய முயற்சி.

1 comment:

Unknown said...

mikka sirappu suthan. melum melum unkalidam irunthu sirantha padaippukal veliyaagattum...maatram kaana...

nantriyudan ,
Densing