Tuesday, June 28, 2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இலக்கியம் இருட்டடிப்பு - கண்டணம் முழக்குவோம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
பத்திரிகைச்செய்தி:24.06.2011 

by Tamil Selvan on Saturday, June 25, 2011 at 9:56pm


முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களில் ஒட்டுதல் வெட்டுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய முக்கியமான இலக்கியப்பகுதிகளும் ஒட்டி மறைக்கப்படுவது கண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மிகுந்த வருத்தமடைகிறது.

குறிப்பாக பாவேந்தர் பாரதிதாசனின் ஆத்திச்சூடி ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. கவிஞர் அப்துல் ரகுமானின் நவீன கவிதை ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.திராவிட இயக்க முன்னோடிக் கவிஞராக மதிக்கப்படும் பாவேந்தரின் பாட்டுக்கே இந்தக்கதியா என்று எழுத்தாளர்கள் பெரும் மனக்கொதிப்படைந்துள்ளனர்.

கவிஞர் அப்துல் ரகுமானின் ” வேலிகளுக்கு வெளியே நீளும் கிளைகளை வெட்டலாம். ஆனால் பூமிக்குக் கீழே நீளும் வேர்களை என்ன செய்வீர்கள்?” என்கிற கவிதை புதுக்கவிதை பிறந்த காலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற கவிதையாகும். அதில் என்ன கட்சி அரசியல் இருக்கிறது?

பாவேந்தரின் ஆத்திசூடியில் எந்தக் கட்சிப் பிரச்சாரமும் இல்லையே? அதே போல அறிவியல் பாடத்தில் சட்ட காந்தப் படம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தைப்பொங்கல் பற்றிய பாடல் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளைத் தமிழர் திருநாளாகத்தான் காலம் காலமாகத் தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். திமுக அரசு சட்டம் கொண்டு வந்ததால் அல்ல. தமிழ் மக்களின் பண்பாட்டு உணர்வை காகிதத்தால் ஒட்டி மறைக்க முடியுமா? இவையெல்லாம் ஏன் ஒட்டப்படுகின்றன என்கிற விளக்கத்தை மக்களுக்குத் தர வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

இந்த மறைப்புகளுக்குப் பின்னணியாக ஒரு பழமைவாதக்கண்ணோட்டமும் சகிப்புத்தன்மையற்ற மனமுமே தொழிற்படுவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கருதுகிறது.இப்போக்கை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.இது வெறும் அரசியல் காழ்ப்புணர்வுப் பிரச்னை அல்ல.கல்வித்தளத்தில் ஒரு தத்துவார்த்தப் போர் துவங்கியிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.தமிழரின் தத்துவ மரபைக் காக்கும் போராட்ட்த்தில் அனைத்துப்பகுதிப் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் ஒன்றுபட்டு இறங்க வேண்டும்.

எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது கை வைக்கும் போக்கை சகல பகுதி எழுத்தாளர்களும் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

அருணன்/மாநிலத்தலைவர் 
ச.தமிழ்ச்செல்வன்/ மாநிலப்பொதுச்செயலாளர்


மேற்கண்ட அறிக்கையை தங்கள் தொலைக்காட்சியில் /இதழில் வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

No comments: