Tuesday, November 13, 2012

தீபாவளிக் கவிதைகள் 1 - வர்சா அழுகிறாள்

வர்சா அழுகிறாள்

யாரோ சொன்னார்களாம்
பூவானம் அக்கினிப் பூக்களை
வானத்தை நோக்கித்
துப்பிக்கொண்டிருக்கையில்
காகங்கள் தங்கும்
மின்கம்பியில் பட்டு
பிடித்த தீயில்தான்
பக்கத்து வீட்டு மாமாவின்
முகம் கை வயிறு
வெந்து போனதென

வர்சாவின் அப்பா
பூவானத்தை கையிலெடுத்தப் போதெல்லாம்
அழுது கொண்டிருந்தாள் வர்சா

பின்
எந்த வெடியை எடுத்தாலும் அழுவது

என்பது
அனிச்சை சரடாய் நீண்டுகொண்டிருந்தது


வெடியும் புகையும் சிரிப்புமாய்
கலந்தெழுந்த பக்கத்துவீட்டின்
திசையைப் பார்த்தும் அழுது கொண்டிருந்தாள்

தீபாவளிக்குள்
கரைந்து விழுந்து கொண்டிருந்தது
அவளின் அழுகை
சிவகாசியில் வெடித்தபோது
அழமுடியாது இறந்துபோன
குழந்தைகளின் குரலாய்
...................... இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.25 pm